ஒரு காலத்தில் கடலைத் தாண்டி ஒன்றுமே இல்லை என நினைத்தது மனித குலம். அதாவது நமது உலகம் கடல் எல்லைக்கு உட்பட்டது மாத்திரமே என்று நம்பியது. படிப்படியாக கடலையும் தாண்டி உலகம் விரிகின்றது என்ற அறிவை எட்டிக்கொண்டது.
அந்த காலத்தில் கடலுக்கு அப்பால் இன்னொரு மனிதன் நம்மைப் போலவே வாழ்கின்றான் என்று கூறும்போது “பைத்தியக்காரன்” என்று மாத்திரமே பதில் கிடைத்திருக்கும். படிப்படியாக மனித குலம் அறிவியலில் வளர்ச்சியடைந்த பின்னரே உண்மைகளை உணர ஆரம்பித்தது. ஒரு காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்ட நிலவும் கூட இன்று மனிதன் விளையாடும் மைதானமாகிப் போனது.
யாரும் இல்லாத ஒரு தனியறை, தனியிடம் வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் அப்படியான இடம் கிடைத்துவிடுமா? இந்த பிரபஞ்சத்தில் எதுவும் வெற்றிடம் இல்லை அனைத்தையும் ஏதோ ஒன்று நிரப்பியுள்ளது. உதாரணமாக யாருமற்ற ஒரு தனியறையில் காற்றும் உட்புகாதவாறு அடைத்துக் கொண்டு உட்காந்து கொள்வோம். நமக்கு நாம் தனிமையில் இருக்கின்றோம் என்றே எண்ணத்தோன்றும்.
அதே போல ஒரு அலைபேசியை அதே அறையில் வைத்து பூட்டினால்? நமக்கு ஒன்றும் இல்லை என்று தோன்றிய அதே இடத்தில் காந்த அலைகள் இருக்கும், எலக்ரோ மேக்னட் கதிர்கள், அதிர்வலைகள் இப்படி எத்தனை எத்தனையோ விடயங்கள் அலைபேசிக்கு தெரியும்.
கோடிக்கணக்கான தகவல்கள் பறந்து கொண்டிருப்பதையும், பேச்சுக்கள் தகவல்கள் அலைகளாக மாற்றமடைந்து முற்றிலும் நெரிசலான இடமாகவே அலைபேசிக்குத் தெரியும். நமக்கு ஒன்றும் இல்லை, தென்படவில்லை என்பதால் அது வெற்றிடம் ஆகிவிடாதே? இங்கு நாம் பார்க்கும் விதம் மாறுபட்டது.
இந்த பிரபஞ்சமும் அப்படிமான ஒன்றுதான் நமக்குத் தெரிந்த விடயங்களைத் தாண்டி முடிவிலியாக இருப்பதே பிரபஞ்சம். நம் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருக்கின்றன இதுவே மனித குலத்தின் பார்வையில் கடவுளாகவும், அறிவியலாகவும் தெரிகின்றது.
ஆரம்பத்தில் இல்லை என்று நம்பிய ஒன்றை அறிவியல் நிரூபித்ததன் பின்னர் இருக்கின்றது என்று நம்புகின்றது மனித குலம். அண்மையில் கருந்துளையின் படத்தை விஞ்ஞானிகள் வெளியிடும் வரை அது வரையிலும் கோட்பாடாக இருந்த விடயம் உண்மை என ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இவ்வாறாகத்தான் அறிவியல் கோட்பாடுகளும் ஆரம்பத்தில் முட்டாள்தனமாக பார்க்கப்படும் பின்னர் உண்மையாக்கப்படும். அப்படியான ஒரு கோட்பாடுதான் இணை பிரபஞ்சம் parallel universe சுருக்கமாகச் சொன்னால் உள்ள அனைத்திற்கும் பிரதிகள் உண்டு என்பதே அந்தக் கோட்பாடு.
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் அல்லது பல்லரங்கப் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் நிச்சயமாக நம்புகின்றார்கள். இதற்கு மல்டியுனிவர்ஸ் (Multiverse) என்று பெயர். இச்சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ். இது ஒன்றும் அறிவியல் புனைகதை அல்ல ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்ற விடயம்.
இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் மாத்திரம் உண்மையல்ல கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்பதும் அவை ஒவ்வொன்றிலும் நாம் வாழலாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்பதே இந்த வாதம்.
ஒரு வரைப் போல ஏழு பேர் வாழலாம் என்பதல்ல ஒருவரைப் போல கணக்கற்றவர்கள் வாழலாம் என்கின்றது இணை பிரபஞ்சக் கோட்பாடு. இந்த பிரபஞ்சத்தில் விடுபட்ட ஒரு விடயம் வேறோர் பிரபஞ்சத்தில் நடக்கலாம், இங்கு காதல் தோல்வி என்றால் வேறோர் பிரபஞ்சத்தில் வெற்றி.
அதாவது ஒரு இலக்கை நோக்கி செல்லும் நபருக்கு ஐந்து வெவ்வேறு பாதைகள் இடைப்படுகின்றன என வைத்துக் கொள்வோம். அப்படியான ஒவ்வோர் பாதையிலும் செல்வது ஒவ்வோர் பிரபஞ்சம் போன்று. முதலாவது பாதையில் சென்றால் மற்ற நான்கு பாதைகளும் விட்டுப்போகும் அப்படியாக விடுபட்டவைகள் வேறோர் பிரபஞ்சத்தில் நடக்கலாம்.
இப்போது இக்கணம் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டு என்னை திட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் இன்னோர் பிரபஞ்சத்தில் வேறோர் செயலில் ஈடுபட்டிருக்கலாம். இன்னோர் பிரபஞ்சத்தில் வேறோர் செயல் இப்படியாக முடிவிலியாகப் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றது இந்த அறிவியல் விதி.
கேட்பதற்கு முட்டாள் தனம் என்றாலும் அறிவியல் உலகில் உள்ள அதி மேதாவிகளும் இந்த கோட்பாட்டை நம்புகின்றார்கள். எப்படி விளக்குவது… ?. ஒரு மரம் நடப்பட வேண்டும் இதற்காக ஒரு குழி தோண்டப்பட வேண்டும் என உங்களுக்கு ஒரு பணி தரப்படுகின்றது என்று வைத்துக்கொள்ளலாம்.
குழியை தோண்டி விட்டீர்கள். குழியை மட்டும் தானே தோண்டி இருக்க வேண்டும்? அதை மட்டும் செய்யாமல் அருகிலேயே சிறு மண் குன்றையும் ஏன் உருவாக்கினீர்கள்? உங்களால் தோண்டப்பட்ட குழியே இந்தப் பிரபஞ்சம் பக்கத்தில் உள்ள மண் மேடு அதன் எதிர்மறை உருவாக்கம். அது வேறோர் பிரபஞ்சம். இதுவே ஆய்வாளர்களின் வாதம்.
சுமார் 1200 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மாவெடிப்பினால் (big bang) நமது பிரபஞ்சம் உருவானதாகவும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவாக்கப்பட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ள அறிவியல். இந்த ஒரு மா வெடிப்பு மட்டும்தான் என முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறுகின்றது.
நாம் அண்ணார்ந்து பார்க்கும் போது தெரியும் அண்ட வெளியின் எத்தனை எத்தனையோ மாவெடிப்புகள் நடந்து கொண்டிருக்கலாம் அல்லது நடந்திருக்கலாம். அப்படியாயின் ஒரு பிரபஞ்சம் ஒரு பூமி என முடிவுக்கு வருவது முட்டாள் தனம் தானே.
எனவே எண்ணத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கின்றன என நம்பப்படுகின்றது அதனைக் கண்டு பிடிக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. சரி ஏற்றுக் கொள்ள வேண்டிய வாதம் தான் ஆனால் அந்தப் பிரபஞ்சங்கள் எங்குள்ளது அண்ட வெளியில் எங்கோ தூரத்தில்? எத்தனையோ ஒளியாண்டுகளுக்கு அப்பால் மட்டும் தானா உள்ளது என்றால் அதுவும் இல்லை நமக்கு அருகிலேயே அதாவது பக்கத்து இருக்கையருகிலேயே இருக்கலாம் என்றும் அறிவியலாளர்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.
அப்படி என்றால் ஏன் அங்கு நுழைய முடியவில்லை என கேட்பது விளங்குகின்றது. அதற்கும் ஓர் பதிலுண்டு.
அண்டவெளி புழுத்துளை (wormhole)
John Archibald Wheeler எனும் ஆய்வாளர் இந்தப் பெயரை வைத்தார். பிரபஞ்சங்களை இணைக்கும் பாதையாக இந்த wormhole உள்ளது என நம்புகின்றது அறிவியல். இன்றைய உலகில் அனைவருக்கும் தெரிந்த மாபெரும் விஞ்ஞானினான ஐஸ்டைன் முதல் வாழ்ந்து அண்மையில் மறைந்த ஸ்டீபன் ஹாக்கின் முதல் அனைவருமே இந்த வாதங்களை ஏற்றுக் கொண்டு தான் உள்ளார்கள்.
இந்த wormhole என்பன அணுவிலும் மிகச்சிறியதான வடிவில் எம் அருகே உலாவுகின்றன அதனால் நாம் அவற்றில் நுழைய முடிவதில்லை எனவும், அதனை பெரிதாக்கி விட முடியும் எனின் இலகுவாக பிரபஞ்சப் பயணிப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர் அதற்கான தேடலையும் செய்து கொண்டேதான் இருக்கின்றனர்.
உண்மையில் நம் உணர்திறனைத் தாண்டியது பிரபஞ்சம். இது வரையில் அதன் ஒரு துளியை மாத்திரமே மனித குலம் அறிந்து கொண்டுள்ளது ஆனால் முடிவிலியான பிரபஞ்சம் தன்னுள் அடக்கியுள்ள மர்மங்கள் இன்று இல்லாவிடின் என்றாவது ஒரு நாள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும். (முதல் இரு பந்திகளில் குறிப்பிட்டதைப் போன்று)
Discussion about this post