எப்போதுமே எம்மைச் சுற்றி ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் மர்மங்களும், உண்மையா? பொய்யா எனத் தெளிவிள்ளாத விடயங்களும் ஏராளம் உண்டு.
அவ்வாறானவற்றில் முதன்மையானதுதான் இல்லுமினாட்டி (Illuminate). இருக்கு ஆனால் இல்லை என்று வடிவேல் பாணியில் இன்றும் உலகம் முழுவதும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பெயரே இந்த இல்லுமினாட்டி.
சமீபகாலமாக பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விடயமானது, வெளியுலகத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் நிழல் உலகில் இருக்கும் ஒரு குழுமமே இந்த உலகை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. “புதிய உலகின் கட்டளை” (new world order) என இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகின்றது என சுய சிந்தனைவாதிகள் கூறுகின்றனர்.
ஒட்டு மொத்த உலகத்தையும் இந்த குழுவே கட்டுப்படுத்துகின்றது எனவும் உலகில் நடந்து கொண்டிருக்கின்ற அல்லது நடந்த பாரிய சம்பவங்கள் கலவரங்கள் பொருளாதார தாக்கங்கள் என அனைத்திற்கும் இல்லுமினேட்டிகளே காரணம். உலக மக்களை அடிமைப்படுத்தி ஆளுவதே இதன் நோக்கம் என கூறுகின்றனர்.
ஆங்கிலத் திரைப்படக்கதைபோன்ற இதனை எளிதாக நம்பிவிட முடியாதுதான் அதனாலேயே இதனை சதியாலோசனைக் கோட்பாடு (Conspiracy theory) எனவும் கூறுகின்றனர். யூகத்தின் அடிப்படையில் தனியொரு நபர் அல்லது ஒரு நிறுவனத்தினால் சான்றுகளை முன்வைத்து முன்வைக்கப்படும் கோட்பாடே Conspiracy theory எனப்படும்.
யார் இந்த இல்லுமினாட்டிகள்?
உலகின் 13 குடும்பங்களைச் சேர்ந்த நபர்களாளேயே இந்த குழு செயற்பட்டுவருவதாக கருதப்படுகின்றது. ஒரு உலகம் ஒரு அரசு என்பதே இவர்களது திட்டம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனின் சுயசிந்தனைவாதிகள் அப்புறப்படுத்தப்படவேண்டும். அதற்கான செயற்திட்டங்கள் மிக நேர்த்தியாக வகுக்கப்பட்டு சதித்திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இல்லுமினாட்டி என்றால் ஆங்கில அர்த்தத்தின்படி ஒளி பொருந்தியவர்கள் எனவும் தத்துவார்த்த அடிப்படையில் அர்த்தம் ஞானம் பெற்றவர்கள் எனவும் பொருள் கொள்ள முடியும். இந்தக் குழு சாத்தானை வழிபடுகின்றவர்கள் எனவும் கூறுகின்றனர்.
ரோம் நகர அரசில் ஆதிக்கம் செலுத்தி வந்த கிறித்தவ மதத்தின் பழைமைவாதம் மற்றும் மூடத்தனத்தை ஜெர்மனியின் ஒரு முற்போக்கு இயக்கத்தினர் எதிர்த்தனர்.
இந்த முற்போக்கு இயக்கத்தினர், மக்களை அறியாமை எனப்படும் இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், தலைவர்கள், மதகுருக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக, ஜெர்மனியின் பைரன் பகுதியில் ஓர் அமைப்பினை உருவாக்கினர். அடம் வைசப் (Adam Weishaupt 1748 – 1830) என்பவரே 1776 ம் ஆண்டு இல்லுமினாட்டி என்ற அமைப்பை தொடங்கியவராக கருதப்படுகின்றார்.
அதன்படி இலுமினாட்டி என்பது 1776 மே 1 ல் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட முற்போக்கு இயக்கம், ரகசிய இயக்கம் எனலாம். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டன் பின்னரே 1789 களில் பிரான்சில் பிரெஞ்சு புரட்சி வெடித்தது என்பதையும் மேலதிகத் தகவலாக இங்கு குறிப்பிடலாம்.
இந்த முற்போக்கு இயக்கத்தின் செயற்பாடுகளின் பாதிப்புகளை உணர்ந்த அதிகார வர்க்கத்தின் தாக்கத்தால் சுமார் 10 அல்லது 15 வருடங்களில் இவ்வமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின.
இந்த மர்மக்குழு தொடர்பில் பல்வேறு கட்டுரைகள், செய்திகள் வெளியிடப்பட்டு வந்தாலும் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்றுவரையிலும் தெளிவில்லாமலேயே இருக்கின்றது. சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் உலகில் எல்லா மூலை முடுக்கு எங்கும் வியாபித்துள்ள நிலையில் இப்படியான ரகசிய குழுக்கள் சாத்தியமா என்ற பிரதான கேள்வியுள்ளது.
அதேபோன்று தற்போதைய வர்த்தக உலகில் பணம் படைத்தவர்களால் எதனையும் செய்து விட முடியும் என்ற கூற்றையும் கூட ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்த ரகசிய குழு எப்படி செயற்படுகின்றது? இதன் இருப்பை நம்ப முடியுமா? இந்தக் குழு அரங்கேற்றியதாகச் சொல்லப்படும் அல்லது முன்வைக்கப்படும் ஆதாரங்களின் உண்மைத்தன்மை என்ன? இப்படி பல்வேறு விடயங்கள் பற்றி இனி தொடராகப் பார்க்கலாம்.
தொடரும்…
Discussion about this post