இன்றளவும் இலங்கை அமைதியின்றிதான் காணப்படுகின்றது. இதற்கு காரணம் ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் நடந்த குண்டுத்தாக்குதல். என்றாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறமிருக்க இந்த விடயமானது தற்போது அரசியல் மயமாக்கப்பட்டு விட்டது என்பதே உண்மை.
இத்தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வாழ் அப்பாவி முஸ்லிம் மக்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் பாதுகாப்பும் இருப்பும் கூட கேள்விக்குறியாக மாறி வரும் நிலையில் முஸ்லிம் மக்களை பிரநிதிதுவப்படுத்தும் தலைவர்கள் கூட தங்கள் அரசியல் சுயநலங்களை நிறைவேற்றிக் கொள்ளப்பார்க்கின்றனரா? என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது.
ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக் கருத்து
நாட்டில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில்தான் அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் திகதி,
“இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தொடர்ந்து வசதி படைத்த சுமார் 7000 முஸ்லிம் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர், இதற்காக வெளிநாட்டு தூதரகத்தில் 7000 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளனர்” என ஹிஸ்புல்லா கருத்து தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி போலிச் செய்தியாகவே இருக்கின்றது என இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உறுதியாகின்றது.
“7000 முஸ்லிம் குடும்பங்கள், இலங்கையை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் எமக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் “இலங்கையில் காணப்படுகின்ற அச்ச நிலைமை காரணமாக இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து இதுவரை வெளிவிவகார அமைச்சகத்துக்கு எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் அறிவிக்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த வெளியேற்றம் தொடர்பிலான ஹிஸ்புல்லாவின் கருத்தின் உண்மைத்தன்மை கேள்வியானது.
அதே போன்று “இலங்கை முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் எந்தவொரு வெளிநாட்டு தூதரகத்தையும் எவரும் நாடவில்லை” என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் பதில்
இவ்வாறாக இந்த விடயமானது பேசுபொருளாக மாறிவிட்டபின்னர் ஹிஸ்புல்லா இது தொடர்பில் விளக்கமளிக்க முனைந்தார். “முஸ்லிம்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த விடயத்தை தான் குறிப்பிட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இல்லை நழுவினார்.
இதுவும் போலித் தகவலானது
ஆனால், “முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற எந்தவொரு கலந்துரையாடலிலும், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறும் விடயம் குறித்து கலந்துரையாடல்களோ, ஆலோசனைகளோ செய்யப்படவில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. ஆக இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஹிஸ்புல்லா எனும் தனி நபர் தனது அரசியல் ஸ்தீரத்தன்மைக்காக போலித் தகவல்களைப் பரப்பியுள்ளார் என்றே உறுதியாகின்றது.
ஹிஸ்புல்லா உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு வருவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் கூறியுள்ளார். எப்போதும் போன்றே நாட்டில் இருந்து முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், நாட்டை விட்டு வெளியேறிவிடும் எண்ணம் எவருக்கும் இல்லை என்பதையும் அசாத் சாலி திண்ணமாக கூறுகின்றார்.
தலைமைத்துவத் திண்ணடாட்டத்தால் தவிக்கும் முஸ்லிம்கள்
இந்த 7000 முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் ஹிஸ்புல்லா வெளியிட்ட கருத்தானது பாரதூரமானது. ஏற்கனவே சிக்கல்களை எதிர்நோக்கி வரும் முஸ்லிம்களுக்கு இந்த கருத்து ஆபத்தை ஏற்படுத்துமே தவிர எந்தவித இலாபத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்பதே உண்மை. முஸ்லிம் தலைவர்களின் கூட்டுப் பதவி விலகல் அவர்கள் மத்தியில் ஓர் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. ஏனைய சமூகங்களுக்கு எடுத்துக்காட்டாக காணப்பட்டது ஆனால் தற்போது அவர்களிடையேயே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.
இதற்கு காரணம் தத்தமது அரசியல் ஸ்தீரத் தன்மை தொடர்பான எதிர்பார்ப்பே என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். “ஊர் இரண்டு பட கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழைய மொழி போல மாறி வருகின்றது இலங்கையின் அரசியல் பாதை.
Discussion about this post