குடியான இடங்களில் போருக்காக நிறுத்திவைக்கப்பட்டிரும் வீரர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இப்படிக் கேட்ட உடனே உங்கள் உள்ளம் காஷ்மீருக்கும், ஈழப்போருக்கும், சிரியாவுக்கும் போவதை தடுக்க இயலாது. யானை கடந்துசென்ற கழனிகள் போல அக்குடிகள் சிதைந்துபோவதை இன்றைய நாளில் வெளிவரும் செய்திகளும் தகவல்களும் எம் கண்முன்னே காட்டுகின்றன.
அனால் நான் சொல்லப்போகும் கதை சற்று சுவாரஸ்யமானது. மேற்சொன்ன உதாரணங்களோடு ஒப்பிடுகையில் இது முற்றிலும் மாறுபட்டது. விசயால சோழரின் பேரரான முதலாம் பராந்தகர் காலத்தில் இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். வடக்கிலிருந்து அவர்கள் படையெடுத்து வரும் அபாயம் உள்ளதை அறிந்த முதலாம் பராந்தகர் தனது புதல்வனான ராஜாதித்தனை லட்சக்கணக்கான வீரர்கள் அடங்கிய ஒரு சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் நிறுத்திவைத்திருந்தார்.
சைன்யத்தில் இருந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றி இருப்பதை விரும்பாத இராஜாதித்தர், அவ்வளத்தை பயனுள்ள விதத்தில் பயன்படுத்த எண்ணினார். சோழ மன்னர்களின் மதிவலிமையும், சமூகம் மீதான தார்மீகப் பொறுப்பும் இன்றளவும் நாம் எண்ணியெண்ணிப் பெருமைப்பட ஏற்றவை.
வடகாவேரியிலிருந்து பெருகிவரும் வெள்ளம் உபயோகப்படுத்தப்படாமல் கடலில் கலப்பதை தடுக்கவேண்டி இச்சந்தர்ப்பத்தை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் ராஜாதித்தர். வடகாவேரியின் கீழணையில் இருந்து வரும் நீரைத்தடுத்து, அதனைத் தேக்கிவைக்கும் பொருட்டு தனது வீரர்களைக்கொண்டு ஒரு மாபெரும் ஏரியை ஏற்படுத்துகிறார். வடக்கே சேத்தியாத்தோப்பிலிருந்து, தெற்கே காட்டுமன்னார்கோயில் வரை ஏறத்தாழ பதினெட்டு கிலோமீட்டர்கள் நீண்ட இத்தேக்கம் பராந்தகச் சோழரின் பட்டங்களில் ஒன்றான வீரநாராயணர் என்ற பெயரைக் கொண்டு வீரநாராயண ஏரி என்று வழங்கப்பட்டது. அதுவே மருவி இன்று வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
சோழதேசத்துக்கு வரவிருந்த பாரிய அழிவிலிருந்தும், பகைவர்களின் சூழ்ச்சியால் அந்நாட்டுக்கு ஏற்படவிருந்த பழியில் இருந்தும் அக்கொற்றத்தைக் காக்கும் பெருமுயற்சிக்கான இரு சிறு ஓலைகளோடு நம் கதையின் நாயகன், வல்லத்து இளவரசன், வல்லவரையன் இந்த ஏரிக்கரையினூடே சோழ தேசத்தை வந்தடைகிறான். காஞ்சியில் இருந்து நெடுந்தூரப் பயணம் செய்து களைத்திருந்த அவனும், அவனது குதிரையும் வீரநாராயண ஏரியின் தண்ணெழிலில் சாவகாசமாகத் திளைத்த கதையை கல்கி பின்வருமாறு வர்ணிக்கிறார்
ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்?…………..மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.
இந்த சுகானுபவத்தை, நீர்வளம் பொருந்திய சோழவள நாட்டின் பசுமையை, அனுபவிக்க இந்த இருபத்தோராம் நூற்றாண்டு உவப்பானதென்று சொல்வதற்கில்லை. செல்வமும், பண்பாடும் நிலைபெற்றிருந்த இயற்கையை நேசித்த எமது வாழ்வியல், கட்டில்லாமல் எங்கெங்கோ சென்று இன்று எம்மை நாமே அடையாளம் கண்டுகொள்ள தத்தளிக்கும் நிலைக்கு எம்மைத் தள்ளியுள்ளது. இருந்தாலும் எஞ்சியிருக்கின்ற தடங்களையேனும் பார்க்கும் பேறுக்காக இருந்த பலநாள் காத்திருப்பின் முடிவில் வீராணம் ஏரியின் எழில்காண நிச்சயித்தோம்.
சோழர்களின் தடங்கள் பெரும்பாலும் கும்பகோணம் நகரைச் சுற்றியே இருக்கின்றது. இதுவே நமது நாயகன் முதன்முதலில் இளைய பிராட்டியைச் சந்தித்த சோதிடர் வீடு அமைந்திருந்த குடந்தை. கும்பகோணத்தில் இருந்து வீராணம் ஏரி அண்ணளவாக ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து வடக்கே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து ஆணைக்கரை, வேம்புகுடி, முத்துசேர்வாமடம், மீன்சுருட்டி, குருங்குடி வழியாக காட்டுமன்னார்கோவில் தாண்டி லால்பேட்டையில் தொடங்குகிறது வீராணம் ஏரி.
வழிநெடுகிலும் விவசாய நிலங்கள், நிழல்தருக்கள், பாரிய விருட்சங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் என கண்ணுக்கு நிறைவான காட்சிகளே காணக்கிடைத்தன. வந்தியத்தேவன் கண்ட எழில்மிகு சோழத்தின் ஆயிரமாண்டு கழிந்த நிலையிலும், அந்நியர் எமது வளங்களையும் செல்வங்களையும் மலைமலையாகக் கொள்ளையடித்த பிற்பாடும், நிலைத்த செல்வமாக இன்றும் பயன் தருபவை விவசாயமும், அதற்குண்டான நீர்வளங்களுமே! இந்தியா என்றாலே ஏதோ வறுமைக்குப் பிறந்த தேசம்போலச் சித்தரிக்கும் உலகு இந்தச் சோழசாம்ராச்சியத்தின் ஆயிரமாண்டு கடந்த எச்ச சொச்சங்களைக் காணவேண்டும்!
அதுபோலவே தமிழர் பண்பாட்டின் நவதலைமுறைளும் தமது வேரின் பெருமைகளை நம்பித் தொடரவேண்டும். உணவுற்பத்தியின் தன்னிறைவு ஒரு நாட்டின் முதுகெலும்பு என்று சோழ மன்னர்கள் நன்கு அறிந்திருந்தமைக்கு நூற்றாண்டுகள் கழிந்தும் பயன்தரும் அவர்களின் நீர் மேலாண்மை சான்று பகரும்.
வீராணம் ஏரியின் தென்கிழக்குத் திசையில் காட்டுமன்னார் கோவில் கிராமத்தில் வீரநாராயணப் பெருமாள் கோவில் இருக்கின்றது. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பழுவேட்டையர்களின் படலம் வீராணம் ஏரியில் இருந்து கடம்பூர் நோக்கிச் சென்ற பிறகு இராத்தங்கலுக்காக சென்ற விண்ணகரக் கோவிலே இந்த வீர நாராயணப் பெருமாள் கோவில்.
பொதுவாக பழந்தமிழ் நாட்டில் நீர்நிலைகளின் பாதுகாப்புக்கென்று அவற்றையொட்டி மகா விஷ்ணுவுக்குக் கோவில்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஸ்ரீ நாராயண மூர்த்தி நீரின் மேலேயே படுத்திருப்பவர் அல்லவா? அதனாலேயே நீர்நிலைகளின் காவல் அரண்களாக மகா விஷ்ணுவும் அவர் பள்ளிகொண்டிருக்கும் ஐந்து தலை நாகமும் கருதப்படுகின்றது. இலங்கையில் உள்ள வரலாற்றுத் தளங்களிலும் இராசதானிகளின் எச்சங்களிலும் காவற்கற்களில் ஐந்து தலை நாகமும், தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் கொண்ட நாகராஜன் எனப்படும் உருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக நீர்த்தேக்கங்களின் வாயிலில் ஐந்துதலை நாகம் பொறித்த காவற்கற்கள் அமைக்கப்பட்டிருக்கும். நீர்த்தேக்கங்களின் காவல் அரண்களாக அவை கருதப்பட்டன. இலங்கை நீர்பாசனத் திணைக்களத்தின் இலச்சினையிலும் இந்த ஐந்து தலை நாகம் இடம்பெறுகிறது. பழந்தமிழ் நாட்டில் காவல் தெய்வமாக கருதப்பட்ட ஆதிசேஷனே இதுவாக இருக்கக்கூடும் என்றும் நாம் ஊகிக்கலாம்.
அதுபோலவே, வீராணம் ஏரியை அமைத்த பிற்பாடு வீர நாராயண புரம் என்னும் கிராமத்தை ஏற்படுத்தி, அதில் ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு ஒரு விண்ணகரை எடுக்கின்றார் இராஜாதித்தர். வீராணம் எரிபற்றி பொன்னியின் செல்வனில் கல்கி கூறிய குறிப்பில் இவ்விண்ணகர (விஷ்ணுகிரக) கோவில் இன்றும் உள்ளது. காட்டுமன்னார் கோவிலை அடைந்ததும் வீராணம் ஏரிக்குச் செல்ல முன்னரே இக்கோவிலை நீங்கள் தரிசிக்கலாம்.
வீராணம் ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களில் தண்ணீர் குபு குபுவெனப் பாய்ந்து கழனிகளுக்குச் செல்லும் அழகை ரசிக்கும் ஆவல் பொன்னியின் செல்வனை முதன்முறை படிக்கும்போதே தொற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் தேக்கி வைத்திருந்த ஆசைகளோடு வீராணம் ஏரிக்கரையை அடைந்த எனக்கு அன்று ஏமாற்றமே காத்திருந்தது. காவிரி பொய்த்துப் போன ஒரு சித்திரை மாதமது.
அடடே! காவிரி வற்றிப்போய் வீராணம் ஏரியிருந்த இடம் ஓர் பெரும் திடல்போல் காட்சி அளித்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவ்வேரியின் நீள அகலங்கள் பரந்து விரிந்திருந்தது. ஏரியின் கரையோடு அமைந்திருந்த சுவர்களையும் நமது அரசியல்வாதிகள் விட்டுவைக்கவில்லை. அங்கும் அவர்களின் விளம்பர ஓவியங்கள் அடிக்கொன்றாய் நிறைந்திருந்தன.
கால ஓட்டத்தில், ஆயிரம் வருட இடைவெளியில் தமிழர்கள் எங்கிருந்து எங்கு வந்திருக்கின்றார்கள் என்பதற்கு அவை சிலேடையாக தோன்றின. காவிரியின் வருகைக்குப் பிறகு வீராணம் ஏரியில் இன்று நீர் நிரம்பியிருப்பதாக அறிகின்றோம். வந்தியத்தேவன் போல நாமும் ஓர் ஆடிமாதத்தில் வீராணம் ஏரிக்கரையோடு செல்ல ஆயத்தமாவோம்.
பாகம் ஒன்று – வந்தியத்தேவன் பாதையில் சோழவளநாடு – அறிமுகம்
Discussion about this post